உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மூதாட்டியை மீட்டு சிகிச்சை அளிக்க உதவிய போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு

Published On 2022-09-12 12:42 GMT   |   Update On 2022-09-12 12:42 GMT
  • மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார்.
  • திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு விளங்கி வருகிறது. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் இந்த சாலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் கந்தலான ஆடையோடு சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார். சாலையின் நடுவில் நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை.அப்போது அந்த வழியாக திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். சாலையின் நடுவில் திக்குதெரியாமல் போராடிய அந்த மூதாட்டியை பார்த்ததும் உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார். ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக தெரிவித்தார். குளிரால் நடுங்கிய அவருக்கு உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

கந்தலான ஆடையுடன் இருப்பதை பார்த்து புதிய ஆடையை வாங்கி அணிய வைத்ததுடன், சால்வையால் உடலை போர்த்தி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன் இருந்துவிடாமல் உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியின் கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். 

Tags:    

Similar News