உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

26 நாட்களாக நடைபெற்ற விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம் நிறைவடைந்தது

Published On 2023-07-31 12:42 IST   |   Update On 2023-07-31 12:42:00 IST
  • தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • ஜூலை 5-ம் தேதி முதல் 26 நாட்களாக 18 மாவட்டங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் முடிவு பெற்றது.

பல்லடம்:

பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் நேற்று நிறைவு பெற்றது.நேற்று நடைபெற்ற போராட்டதிற்கு குண்டடம் மேற்கு ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் பொருளாளர் ரமேஷ் சிவக்குமார், சேமலை கவுண்டன்பாளையம் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆதரவு தெரிவித்தார். கொங்கு பண்பாட்டு மையம் மற்றும் கொங்கு வர்த்தக கூட்டமைப்பின் சார்பாக பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது.

குழுவினரோடு சேர்ந்து பெருஞ்சலங்கை ஆட்டம் ஆடி விவசாயிகளின் போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆதரவு தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இச்செயல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தது.இதற்கிடையே கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் 26 நாட்களாக 18 மாவட்டங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் முதல் கட்டமாக நேற்றோடு நிறைவடைந்தது.அடுத்த கட்டமாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 7-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியரின் வழியே, தமிழக முதல்வருக்கு, மனு கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அலுவலகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News