போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி, தேங்காய் களம் உரிமையாளர் குணசேகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய காட்சி .
கண்காணிப்பு கேமரா அணைத்து வைத்திருந்ததை நோட்டமிட்டுகாங்கயம் தொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
- அடையாளம் தெரியாத 7 போ் முகமூடி அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.
- ரோவில் இருந்த 25 பவுன், ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனா்.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சாவடிப்பாளையத்தை சோ்ந்தவா் குணசேகரன் (வயது 47). இவா் அதே பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். ஆலையின் வளாகத்தில் உள்ள வீட்டில் மனைவி செல்வி (43), மகன்கள் தனுஷ் (20), நிதா்ஷன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு குணசேகரன் கதவைத் திறந்துள்ளாா். அப்போது, அடையாளம் தெரியாத 7 போ் முகமூடி அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.
பின்னா், கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டவா்கள் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளனா். அவா்களிடம் இருந்து பீரோ சாவியைப் பெற்றுக்கொண்ட கொள்ளையா்கள் குணசேகரன் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 25 பவுன், ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனா்.தடயத்தை மறைப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு சென்றுள்ளனா்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் டி.எஸ்.பி., பார்த்தீபன், காவல் ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் சந்திரன் உள்ளிட்ட போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் ஆய்வு செய்தனா். விசாரணையில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையா்கள் தமிழ், கன்னடத்தில் பேசியது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காங்கயம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பவானீஸ்வரி, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் ஆகியோா் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்தனா்.
குணசேகரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு காங்கயம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கேமராவை ஆப் செய்து வைத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.