உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் டாலரில் சரிவு

Published On 2022-08-15 07:11 GMT   |   Update On 2022-08-15 07:11 GMT
  • முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது.
  • வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும்.

திருப்பூர் :

நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ளது.நாட்டில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டு(2022-23) துவக்கம் முதல் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் இருந்தது. டாலர் மதிப்பில் கணக்கிடும்போது ஏப்ரல் - 21.44 சதவீதம், மே - 27.85 சதவீதம், ஜூன் - 49.82 சதவீதம் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. நிதியாண்டின் முதல் காலாண்டு வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவந்த ஏற்றுமதி வர்த்தகம், முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1.388 பில்லியன் டாலராக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஜூலை மாதம் 1.381 பில்லியன் டாலராக 0.60 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ரூபாயிலும், டாலரிலும் வளர்ச்சி நிலையிலேயே காணப்பட்டது. ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, கடந்த ஆண்டு ஜூலை மாத ஏற்றுமதி 10,347.10 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த ஜூலை மாத ஏற்றுமதி வர்த்தகம் 10,992.26 கோடியாக 6.17 சதவீதம் உயர்ந்திருப்பது போல் தெரிகிறது. இதை வளர்ச்சியாக கருதமுடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 74.55 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு நடப்பு ஆண்டு 79.60 ரூபாயாக 6.78 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனாலேயே டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ள வர்த்தகம் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது உயர்ந்தது போன்று தெரிகிறது. இம்மாத இறுதி முதல் வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும். ஜூலையில் ஏற்பட்டுள்ள அரை சதவீதத்துக்கும் அதிகமான இந்த வர்த்தக சரிவு வரும் மாதங்களில் தொடர்ந்துவிடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News