உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த கட்டடத்தை படத்தில் காணலாம்.

பல்லடம் பஸ் நிலையத்தில் ஆபத்தான கட்டிடத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2022-07-02 06:05 GMT   |   Update On 2022-07-02 06:05 GMT
  • தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
  • பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல்லடம் :

பல்லடம் பஸ் நிலையத்தில், சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது. இந்த நிலையில் இந்தக் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சி இடத்தை ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த கட்டடத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்புத் தகடுகளிலான தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி தாட்கோ நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் நகராட்சிக்கு அந்த இடத்தை ஒப்படைத்தால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம், சுகாதார வளாகம் போன்றவை அமைக்க இடம் தேவைப்படுகிறது என பலமுறை தாட்கோ நிறுவனத்திற்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News