உள்ளூர் செய்திகள்

ஈரோடு ரிங் ரோடு அருகே பெண் கொலை- போலீசார் விசாரணை

Published On 2026-02-10 12:25 IST   |   Update On 2026-02-10 12:25:00 IST
  • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண் எதற்காக வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • போலீஸ் நிலையங்களில் யாராவது பெண் மாயமாகி உள்ளாரா என்று புகார் வந்துள்ளதா என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு -சென்னிமலை ரோட்டில் இருந்து திண்டல் செல்லும் ரிங் ரோட்டில் ரெயில்வே பாலம் பகுதி உள்ளது. இந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.

இந்நிலையில் இன்று காலை இந்த பகுதி வழியாக பால்காரர் ஒருவர் சென்று உள்ளார். அப்போது ரெயில்வே பாலம் அருகே காலி இடத்தில் பெண் ஒருவர் தலையில் கல்லை போட்ட நிலையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணிற்கு 30 முதல் 35 வயது இருக்கும். அவரது உடல் அருகே சிகப்பு கலர் சுடிதார் இருந்தது. மேலும் கல் ஒன்றும் இருந்தது. அந்தக் கல்லை மீட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பெண் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரத்தம் உறைந்து காணப்படுவதால் கொலை நடந்து ஒரு நாட்கள் மேலிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண் உடல் அருகே சிகரெட்டுகள் இருந்தன.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண் எதற்காக வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர்.

மேலும் மோப்பநாய், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதால் அவரது முகம் சிதைந்து இருந்தது. இதனால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது பெண் மாயமாகி உள்ளாரா என்று புகார் வந்துள்ளதா என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News