உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தூய்மைக்கான மக்கள் இயக்கம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

Published On 2022-07-11 08:25 GMT   |   Update On 2022-07-11 08:25 GMT
  • வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
  • மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் பல்வேறு வகையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த இயக்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மற்றும் வட்டக்கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில் அறிவுறுத்தப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்பு நடத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது தொடர்பான தலைப்பு களில் போட்டிகள் நடத்த வேண்டும்.பள்ளி வளாகம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறத்தின் தூய்மை பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட அறிவுறுத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடத்த மாநகராட்சி சுகாதார பிரிவினர் தயாராக உள்ளனர். கல்வி நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி, மாணவர்கள் மத்தியில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு சேர்க்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News