உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மானிய விலை பண்ணைக்கருவிகள் - தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-04-30 04:24 GMT   |   Update On 2023-04-30 04:24 GMT
  • டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
  • தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

திருப்பூர்:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிராக்டர், ரோட்டோவேட்டர், விசைத் தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பயன் தருகிறதா, திட்டத்தை வரும் ஆண்டுகளிலும் தொடரலாமா என்பது தொடர்பாக கள ஆய்வு மூலம் அறிந்து அறிக்கை சமர்பிக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமையில், பொங்கலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொம்முராஜூ, வேளாண்மை அலுவலர் தனவேந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஞ்சித்குமார், மஹேந்திர பிரியா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், பொங்கலூர் வட்டாரம், கேத்தனூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவருக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட சுழல் கலப்பை, வாலிபாளையம் மற்றும் வி.சுள்ளிபாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கப்பட்ட தார்பாலின், விசைத்தெளிப்பான் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

பண்ணை கருவிகள் பலனளிக்கிறது. வரும் ஆண்டுகளிலும் மானிய விலையில் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர் என உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் தெரிவித்தார். 

Tags:    

Similar News