உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஆடுகள் திருடிய 4 பேர் கைது

Published On 2023-11-24 03:43 GMT   |   Update On 2023-11-24 07:00 GMT
  • விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார்.
  • 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முத்தூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி, பாலசமுத்திரம், முருங்ககாட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவகோகுல் (வயது 24). இவரது விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சல் முடித்து, மாலையில் அனைத்து ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 செம்மறி ஆடுகள் மற்றும் 5 செம்மறி ஆட்டுக்குட்டிகள் என மொத்தம் 8 ஆடுகள் காணாமல் போயிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் சென்று தேடிப்பார்த்தும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகோகுல் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதுசமயம் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பக்கம் உள்ள பச்சாபாளையம் கரடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 38), ஈரோடு, வெங்கியம்பாளையம் பகுதியை சேர்த்த விஜயகுமார் (35), ஈரோடு, கடைசி குப்பி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பேரறிவாளன் (24), ஹரிமுகேஷ் (21) என்பதும் இவர்கள் 4 பேரும் செம்மறி ஆடுகளை திருடியது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 4 பேரும் விவசாய, கூலி வேலைக்கு சென்று கொண்டு இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News