உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை, அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-09-28 05:08 GMT   |   Update On 2022-09-28 05:08 GMT
  • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and Children (Regulation) Act 2014-ன் கீழ் பதிவு செய்ய தெரிவிக்கப் பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் (அறை எண் : 35-36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண் : 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23), பதிவு செய்ய அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட பிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் பிரிவு 12ன் உட்பிரிவு 1, 2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட பிரிவுகள் 5, 6 மற்றும் 12-ன் கீழ் எந்த விதிகளுக்கும் இணங்க தவறிய எந்த ஒரு நபரும் வழக்கில் தண்டிக்கப்படுவார். முதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம்அபராதமும், இரண்டாவது அல்லது அதை தொடர்ந்து குற்றமாக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் .

அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and children (Regulation) Act 2014-ன் கீழ் 30.9.2022க்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News