உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கிராமப்புறங்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-03-13 05:54 GMT   |   Update On 2023-03-13 05:54 GMT
  • பிஏபி., பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • உடுமலை நகர பகுதிக்கு மட்டும் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உடுமலை :

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பிஏபி., பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தளி கால்வாயை அடிப்படையாகக் கொண்டு உடுமலை,குடிமங்கலம்,கணக்கம்பாளையம், பூலாங்கிணர்,மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் மூலமாக உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.ஆனால் உடுமலை நகர பகுதிக்கு மட்டும் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் வாரத்துக்கு இரண்டு முறை அதுவும் குறைந்த அளவு தண்ணீரே வழங்கப்படுகிறது.இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீரை பெற்று வருகின்றோம்.ஆனால் உடுமலை நகரத்தை போன்று கிராமப்புறத்திற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து குடிதண்ணீரை வழங்குவதில்லை. கிராமத்தில் வாரம் இரண்டு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது.குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வந்தாலும் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.ஆனால் நகர்புறத்தில் நாள்தோறும் காலையில் தவறாமல் தண்ணீர் வந்து விடுகிறது. ஒரு சிலரைத்தவிர ஏராளமானோர் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்தி வருவதுடன் கழிவுநீர் கால்வாயில் தண்ணீரை வீணடித்து வருகின்றனர்.அங்கு வீடுகளுக்கு மீட்டர் மாட்டி தண்ணீரை சேமிப்பதற்கும் கூடுதலாக வரி வசூல் செய்வதற்கும் அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் விலைமதிப்பற்ற தண்ணீரை நகரப்பகுதி மக்கள் யாருக்கும் பயன்படாத வகையில் செலவழித்து வருகின்றனர்.ஆனால் கிராமப்புறத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.அனைவரும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தவறாமல் வரி செலுத்தியும் வருகின்றோம். ஆனாலும் நாள்தோறும் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை.எனவே உடுமலை நகர பகுதியை போன்று சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களுக்கும் நாள்தோறும் குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News