உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலைக்கு முதல்-அமைச்சர் வருகை அரசு அதிகாரிகள் ஆலோசனை

Published On 2022-07-08 06:00 GMT   |   Update On 2022-07-08 06:00 GMT
  • அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது.
  • அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

உடுமலை :

உடுமலை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது. இதில் 16ந் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார் . 15-ந்தேதி பொள்ளாச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவு உடுமலை வழியாக திருமூர்த்தி மலைக்கு வருகிறார். அன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் 16 ந் தேதி காலை அமராவதி சைனிக் பள்ளியில்நடைபெற உள்ள வைரவிழாவில் கலந்து கொள்கிறார்.

முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் வைரவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் உடுமலை வழியாக திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி நகர் செல்லும் பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது.

ஆர்டிஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார் .கூட்டத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர். தேன்மொழி வேல் ,சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு, நீர்வள ஆதார அமைப்பு ,பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம் ,நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை ,மருத்துவ துறை ,ஊரக வளர்ச்சி துறை ,போக்குவரத்து துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுஅதன்படி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News