உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் அருகே டாஸ்மாக் பார் ஊழியர்கள் மீது தாக்குதல் - 4 பேர் கைது

Published On 2023-07-26 12:19 IST   |   Update On 2023-07-26 12:19:00 IST
  • வீட்டுக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டிலுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
  • காயம் அடைந்த 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த கவுண்டம்பாளையம் நால் ரோட்டில் இருந்து மொரட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. சம்பவத்தன்று இங்குள்ள பாரில் ஊத்துக்குளி பாரதிநகரை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), வாசுதேவன் ( 23 ), ஆரியன் என்ற பழனிபாரதி (19) மற்றும் பல்லடம் பள்ளிவாசல் வீதியை சேர்ந்த சல்மான் கான் ( 24) ஆகியோர் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டிலுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை பாரில் வேலை செய்தவர்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து உள்ளூர் நண்பர்களை வரவழைத்து நாங்கள் அனைவரும் உள்ளூர்காரர்கள் தான் எங்களிடமே பணம் கேட்பாயா? என்று தகாத வார்த்தையில் பேசியதுடன், தொடர்ந்து கட்டை மற்றும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாரில் வேலை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை மற்றும் அய்யாதுரை, குணா ஆகிய 3 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேந்தர், வாசுதேவன், ஆரியன் என்ற பழனி பாரதி, சல்மான்கான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சில பேர் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது. காயம் அடைந்த 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News