தாமிரபரணி ஆற்றின் நிலையை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் நியமனம் - ஐகோர்ட் மதுரை கிளை
- ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
- ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார்.
மதுரை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி தூத்துக்குடி சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை நிறைவேற்றாததால் நெல்லை மாநகராட்சி ஆணையர் ரூபேஷ்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மதனசுதாகர் உள்பட 12 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, "தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு ஆண்டுக்கு மேலாகியும் நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் திருப்தியளிக்கவில்லை. நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான உறுதியான திட்டம் குறித்து நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார். அவருக்கு உள்ள நேரடி அனுபவத்தின் மூலம் அவரால் தாமிரபரணியை தூய்மைப்படுத்த சாத்தியமான மற்றும் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம். அவரிடமிருந்து வெளிவரும் பரிந்துரைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு தாமிரபரணி ஆறு அதன் தூய்மையான நிலையை மீண்டும் பெறுவதற்காக முழுமையாகச் செயல்படுத்தப்படும். இப்பணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை பெற ராஜேந்திர சிங்குக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.