ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க.வினர் 300 கள்ள ஓட்டுகள் சேர்ப்பு- திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
- கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இன்றும் நாளையும் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் விடுபட்ட வாக்காளர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்க நிர்வாகிகள் உதவ வேண்டும். பெயர் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர் உள்பட வீடு தோறும் சென்று தங்கள் பகுதியில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது. அதன்பிறகு மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 6,7,8 வாக்காளர் விண்ணப்ப படிவங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படிதான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-ல் நல்லாட்சி மலர்கின்றபோது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ஆனால் 100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்தி விடுவார்கள் என தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொரு பூத்துகளின் மூலம் பி.எல்.ஓ.க்களை கொண்டு 300 வாக்குகளை சேர்த்து உள்ளனர். அதனை நீக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கைக்கு உள்ளவர்களாக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பட்டியலை கட்சியினர் துண்டு பிரசுரங்களாக பிரசுரித்து மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கட்சியினர் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.