தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி பிரச்சனை-உள்கட்சி மோதல்: காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

Published On 2026-01-03 15:07 IST   |   Update On 2026-01-03 15:07:00 IST
  • சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
  • நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் கிரீஷ்சோடங்கர் தனது அறிக்கையை டெல்லி தலைமையிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் காங்கிரசுக்குள் விசுவரூபம் எடுத்து உள்ள உட்கட்சி பிரச்சனையும், தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரங்களும் பெரும்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும். அமைச்சரவையில் இடம் வேண்டும். அடுத்து வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க.விடம் இருந்து உடனடியாக பதிலையும் எதிர்பார்க்கிறது. இது பற்றி கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்கும்படி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் தி.மு.க.விடம் வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் தி.மு.க. தரப்பில் உடனடியாக பேச்சுவார்த்தை குழு அமைக்க வாய்ப்பில்லை என்றும் தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்றும் கூறி விட்டனர்.

வழக்கமாக தி.மு.க. பேசும் போது பேசிக்கொள்ளலாம் என்றுதான் காங்கிரசும் காத்திருக்கும். ஆனால் இந்த முறை விஜய் கட்சி என்ற புதிய வாய்ப்பும் இருப்பதால் அதை பயன்படுத்தி தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

கூட்டணி விவகாரத்தில் காங்கிரசுக்குள்ளும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். அது மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருக்கும். காங்கிரசும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால் தேர்தல் அனுபவம் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டுமா? தி.மு.க. வெற்றிக் கூட்டணி. எனவே அதில் தொடரலாம். கூடுதல் சீட் போன்ற விவகாரங்களை பேசி முடிவு செய்யலாம் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.

இந்த முறை காங்கிரசுக்கு தி.மு.க. 30 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்றும் இது தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசி உறுதி செய்வார் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையில் கரூர் எம்.பி. ஜோதிமணி, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவு பாதையில் சென்று கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தது கட்சிக்குள் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. ஜோதிமணியின் கருத்துக்கு மற்றொரு எம்.பி.யான மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

தி.மு.க.வுடன்தான் கூட்டணி தொடர வேண்டும் என்றும் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்றும் காங்கிரசில் இரு பிரிவாக இருப்பதன் வெளிப்பாடு தான் இந்த புதுப்பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

ஜோதிமணியின் விமர்சனத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு மாநில தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறேன் என்றார்.

ஜோதிமணியின் புகாருக்கான பின்னணி காரணம் பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வேடசந்தூர், ஒட்டப்பிடாரம், பழனி ஆகிய 3 தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு கட்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைவராக ஜோதிமணியின் ஆதரவாளர்தான் நியமிக்கப்பட்டார். தற்போது அந்த மாவட்ட தலைவர் ஜோதிமணிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்.

அவர் ஜோதிமணி பற்றி தரக்குறைவாக விமர்சித்தது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கைக்காக டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பி.எல்.ஓ.1 படிவம் ஜோதி மணிக்கு குறிப்பிட்ட நாளுக்குள் சென்று சேரவில்லை. இதனால் பி.எல்.ஓ. 2 நியமிக்க தன்னால் முடியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

வெளிச்சத்துக்கு வந்தது இந்த காரணங்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக்கி மாநில தலைமைக்கு எதிராக அணி திரள்வதாகவே கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரீஷ் சோடங்கர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து ஒவ்வொருவரிடமும் கருத்துக்கள் கேட்டறிந்தார்.

கட்சிக்குள் எழுந்துள்ள இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன என்பது பற்றியும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து இன்று மாலை வரை பல தரப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை (ஞாயிறு) மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் அகில இந்திய செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் கிரீஷ்சோடங்கர் தனது அறிக்கையை டெல்லி தலைமையிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News