உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம்-குட்டைகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் - போராட்டக்குழுவினர் வலியுறுத்தல்

Published On 2023-10-09 08:22 GMT   |   Update On 2023-10-09 08:22 GMT
  • அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது.
  • வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது.

திருப்பூர்:

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், காலிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் தான் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை நம்பிதான் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இது குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென் மேற்கு பருவமழையை கணக்கிட்டு திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில் தென் மேற்கு பருவமழை பொய்த்தது. வட கிழக்கு பருவமழையின் போது போதிய மழை பெய்து, நீர் வரத்து இருக்கும் போது தான் திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வர முடியும் என்றனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறுகையில், கடந்த ஆண்டே இத்திட்டம் 90 சதவீதம் முடிந்துவிட்டது.கடந்த நான்காண்டாக நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து பவானியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கடந்தாண்டு 620 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அப்போதே வெள்ளோட்டம் முடித்து திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது. நீலகிரி மலைத்தொடரில் பெருமழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே உபரி நீர்வெளியேறும். அதன் வாயிலாக திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், நீலகிரி மலையில் பெய்யும் மழையை நம்பியே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இடைபட்ட நேரத்தில் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News