கோப்புபடம்
காங்கயம் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து
- செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45).
- காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
முத்தூர் :
காங்கயம் அருகே சிவன்மலை, செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). அப்பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தகர குடிசை வீட்டில் சிவகுமாரின் தாயார் நாச்சம்மாள் நேற்று இரவு சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் அடுப்பின் அருகே இருந்த ஓலையில் திடீரென தீ பிடித்தது. தீயானது மளமளவென பரவி குடிசை வீடு முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. வீட்டிலிருந்த பாத்திரங்கள் மூலம் தண்ணீரை எடுத்து ஊற்றியும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அனைவரும் எவ்வித தீக்காயங்களும் இன்றி உயிர் தப்பினர். குடிசை வீட்டில் நகை, பணம் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் இல்லாததால் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் முற்றிலும் இருந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.