உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது

Published On 2023-08-09 10:27 GMT   |   Update On 2023-08-09 10:27 GMT
  • பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • பாதிக்கப்பட்டவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பல்லடம்:

பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் முத்துக்குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மேஸ்திரியாக உள்ளார் .அவரிடம் பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என்பதால் அங்கு பணி புரியும் சுஜித் குமார், ராஜேந்திர யாதவ், புசன் குமார் ஆகிய 3 பேர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடத்தை நோக்கி வந்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த 3 வாலிபர்கள் அவர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ .3 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மொழி தெரியாததால் தவித்த அவர்கள் மீண்டும் வேலை செய்யும் கட்டிடத்திற்கு திரும்பிச் சென்று விட்டனர். இது குறித்து அவர்கள் மேஸ்திரி விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி,சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பல்லடம் - மாணிக்காபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பீகார் வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரது மகன் அருண் குமார் (வயது 23) ,பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் ரமேஷ் குமார் ( 32) அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் பார்த்திபன் ( 25) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News