உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனையை போலீசாரிடம் காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்- திருப்பூரில் தந்தை-மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2025-03-24 22:57 IST   |   Update On 2025-03-24 22:57:00 IST
  • படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 25). இவர் அதே பகுதியில் தங்கி குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்றதுடன், அங்கிருந்த அரவிந்தனை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகேசன் தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் ரத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . அப்போது இருவரையும் அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி , ஆகாஷ் , ஸ்டீபன் ராஜ், ஆதி, லலித்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

அரவிந்தன் இடுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரவிந்தனை கொலை செய்யும் நோக்கில் இது போன்ற செயலில் 5 பேர் கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News