பண்ருட்டி அருகே தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையே நேரத்தகராறு:அபராதம் விதித்த போலீசார்
- 2 தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வர வேண்டுமென கூறி அனுப்பிவைத்தார்.
கடலூர்:
கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ் நேற்று புறப்பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை பணிகள் நடப்பதால், இந்த பஸ் மாற்று பாதையில் சென்றது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பஸ் நேற்று மாலை பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி அருகில் சென்றது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ், கள்ளக்குறிச்சி பஸ்சின் குறுக்கே நிறுத்தப்பட்டது. இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், தனியார் பஸ் ஊழியர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், பயணிகளை இறக்கிவிட்டு பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வரவேண்டுமென கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து இன்று காலை 2 தனியார் பஸ் ஊழியர்கள் பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாதென எச்சரித்து அனுப்பினார்கள்.