உள்ளூர் செய்திகள்

சென்னை கால்டாக்சி டிரைவர் கழுத்தை அறுத்து கொலை- 3 பேர் கைது

Published On 2022-06-28 08:40 GMT   |   Update On 2022-06-28 08:40 GMT
  • பிரசாந்த் உள்பட 5 பேரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு கால்டாக்சியை பதிவு செய்து உள்ளனர்.
  • கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த வல்லம் அருகே மேலமையூர் கோவில் ஆர்ச் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையுண்டது சென்னை, சோழிங்கநல்லூர், கழனி பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் அர்ஜூன் (வயது 30) என்பது தெரிந்தது.

விசாரணையில் கோயம்பேட்டில் தங்கி தொழிலாளி களாக வேலைபார்த்து வந்த பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி, கத்திமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 2 பேர் சேர்ந்து கால்டாக்சி டிரைவர் அர்ஜூனை கொலைசெய்துவிட்டு காரை கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து பிரசாந்த், திருமூர்த்தி, கத்திமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

கடந்த 25-ந்தேதி இரவு பிரசாந்த் உள்பட 5 பேரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு கால்டாக்சியை பதிவு செய்து உள்ளனர். காரில் சென்றபோது டிரைவர் அர்ஜூன் சந்தேகம் அடைந்ததால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வல்லம் அருகே சாலை ஓரத்தில் வீசிவிட்டு காரை கடத்தி தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் போலீசில் சிக்கி கொள்வோம் என்று பயந்து கொலையாளிகள் காரை மேல்மருவத்தூர்- அச்சரப்பாக்கம் இடையே விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையுண்ட அர்ஜூனுக்கு ஜோதிகா என்ற மனைவியும், 3 மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளனர்.

இதற்கிடையே அர்ஜூன் கொலையை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க கோரியும் இன்று மதியம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கால்டாக்சி டிரைவர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News