உள்ளூர் செய்திகள்

மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர்: தொல்.திருமாவளவன்

Published On 2022-11-21 03:12 GMT   |   Update On 2022-11-21 03:12 GMT
  • எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார்.
  • தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.

வேலூர் :

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்க்க கூடிய ஒன்று. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர் கவர்னர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தான் கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடைவெளி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக இணைப்பு பாலமாக இருக்க வேண்டியவர் கவர்னர். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னரே தவிர, கவர்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டதல்ல மாநில அரசு. இதை உணராமல் தமிழ்நாடு கவர்னர் மட்டுமல்ல. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கவர்னர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர்.

நளினி உள்ளிட்ட 6 பேரை சட்டப்படி விடுதலை வழங்குவதற்கு முகாந்திரம் இருந்ததாலேயே சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இதில், விமர்சிக்க ஒன்றும் இல்லை. ஆனால் மத்திய அரசு 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அல்லது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினையில் ஒரே மாதிரியான அணுகுமுறையை தான் கையாள்வார்கள் என்பதற்கு சீராய்வு மனு ஒரு சான்று. இந்த சீராய்வு மனுவால் இவர்கள் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது.

அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். ஆனால் பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று அவர் கூறினால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார் என்று கருத வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கரைய விட்டு விட்டார். கைவிட்டு விட்டார் என்று எண்ண தோன்றுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க. ராட்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று நகைச்சுவையாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News