உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் படத்தில் காணலாம்.

மூலைக்கரைப்பட்டி அருகே பட்டா கேட்டு கிராம மக்கள் போராட்டம்- சுடுகாட்டில் குடியேற முயன்றதால் பரபரப்பு

Published On 2023-02-11 10:06 GMT   |   Update On 2023-02-11 10:06 GMT
  • சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
  • மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேற சென்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.

மேலும் தனிப்பட்ட நபர்கள் சிலர் சுடுகாட்டு பாதை உள்ளிட்ட பொது இடங்களை தங்களது பட்டா நிலம் என கூறி வேலி அமைத்து தடுத்துள்ள தாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக இறந்தவரின் உடலை வேறொரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்லும் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இது வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்

இதனையடுத்து இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்துவதற்காக சென்றனர்.

அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அவர்கள் தெருவிலேயே தங்களது போராட்டத்தை தொடங்கினர்.பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்படாததால் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிமாணவ, மாணவி களும், பெண்களும், முதி யவர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நடு தெருவில் சமையல் செய்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையறிந்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News