உள்ளூர் செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அரவிந்த்.

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்

Published On 2022-08-08 14:36 IST   |   Update On 2022-08-08 14:36:00 IST
  • அதிக தண்ணீர் காரணமாக டைவ் அடித்த அரவிந்த் தண்ணீரின் சுழற்சியில் சிக்கியுள்ளார்.
  • தீயணைப்பு துறையினர் சுமார் 6 கி.மீ. தூரம் வரை தேடினர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேடு தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.

இவ்வாற்றிற்கு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக நீராட வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று தருமபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) என்பவர் தனது நண்பரின் தந்தையின் ஈமச்சடங்கிற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்.

கிருஷ்ணக்கிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் குளிப்பதாக சென்ற அரவிந்த் பழைய பாலத்தில் இருந்து டைவ் அடித்ததாக கூறப்படுகிறது. அதிக தண்ணீர் காரணமாக டைவ் அடித்த அரவிந்த் தண்ணீரின் சுழற்சியில் சிக்கியுள்ளார்.

டைவ் அடித்து உள்ளே சென்றவர் மீண்டும் வராததால் உறவினர்கள் அச்சமடைந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கும், பாரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு துறை அலுவலர் (பொ) சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சுமார் 6 கி.மீ. தூரம் வரை தேடினர்.

இதுவரை அரவிந்த் எங்கும் கிடைக்காததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து இன்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News