உள்ளூர் செய்திகள்

குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

Published On 2022-09-22 09:23 GMT   |   Update On 2022-09-22 09:23 GMT
  • நன்றி சொல்லும் வகையில் துதிக்கையை உயர்த்தி காட்டியது.
  • வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டம் பந்தலூர் வனச்சரகத்தில் உள்ள தனியார் எஸ்டேட் செல்லும் வழியில் எஸ்டேட் பணியாளர்கள் ஒரு யானை குட்டி படுத்து கிடப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் வன ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனவர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று யானையை பார்வையிட்டனர். அப்போது உடல் சோர்வடைந்த நிலையில் 2 வாரமே ஆன குட்டி யானை தாயைப் பிரிந்து தவித்தது கிடந்ததை பார்த்தனர். அதனை எழுப்பி, வனத்துறையினர் தண்ணீர் குடிக்க வைத்து, யானையை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

இன்னொரு பிரிவாக வனத்துறையினர் தாய் யானையை தேடி காட்டுக்குள் சென்றனர். 2 மணி நேரத்தில் தாய் யானை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குட்டி யானையை அங்கு அழைத்து கொண்டு சென்று கூட்டத்தின் அருகே விட்டனர்.

எவ்வித சிரமமும் இன்றி குட்டியை தாய் யானை அரவணைத்துக் கொண்டது. அது விடைபெற்று செல்லும்போது வனத்துறையினருக்கு நன்றி சொல்லும் வகையில் துதிக்கையை உயர்த்தி காட்டியது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 1 மணி நேரம் வனத்துறையினர் அந்த யானை கூட்டத்தை பின் தொடர்ந்து சென்றனர். 2 முறை தாய் யானை குட்டிக்கு பால் அளித்ததை பார்த்துவிட்டு திரும்பி வந்தனர். முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் துரைராஜ் தலைமையில் சிறப்பாக பணியில் ஈடுபட்ட வனச்சரக அலுவலர் , வனவர் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News