உள்ளூர் செய்திகள்

அழகு கலை பெண் கணவருடன் பலி

Published On 2023-01-24 15:53 IST   |   Update On 2023-01-24 15:53:00 IST
  • மீட்பு வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
  • கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வடக்கிப்பா ளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவரது சொந்த ஊர் மதுரை.

எலக்ட்ரீசியான பணியாற்றிய அருண்குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் பொள்ளாச்சிக்கு வந்து குடியேறி விட்டார்.

இவரது மனைவி கவிதா. இவர் அழகு கலை படித்துள்ளார். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு சென்று பெண்களுக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று அருண்குமாரும், அவரது மனைவி கவிதா வும் வெளியில் சென்று மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். கோவை ரோடு சேரன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மீட்பு வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அருண்குமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கவிதா படுகாயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார்.

இந்த விபத்தில் மீட்பு வாகனத்தின் டிரைவரான ஆனைமலை தாத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் (45) காயம் அடைந்தார். அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலமுருகன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கிய லாரி ஒன்றை ஆய்வுக்கு பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மீட்பு வாகனம் மூலம் பாலமுருகன் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது மீட்பு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடவே மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

மீட்பு வாகனம் இழுத்துச் சென்ற லாரி, சாலையோரத்தில் நின்ற தடுப்புச்சுவர் மற்றும் அறிவிப்பு பலகையை உடைத்துக் கொண்டு தென்னந்தோப்புக்குள் பாய்ந்து நின்றது. 

Tags:    

Similar News