உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் குட்டை, நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு- யானைகள் வெளியேறுவது குறைந்தது

Published On 2024-05-27 05:30 GMT   |   Update On 2024-05-27 05:30 GMT
  • யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது.
  • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது. அப்படி வெளியேறும் யானைகள் ரோட்டை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது.

இதனால் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிகளில் வெயில் காரணமாக கடும் வரட்சி நிலவியது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கிடந்தது.

அதே போல் வெயில் கொளுத்தியதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. இதனால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்பட்டது.

இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வந்தது.

இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதே போல் தொடர்ந்து வனப்பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை தூறு கொண்டே உள்ளது.

இதனால் தாளவாடி வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதே போல் தாளவாடி வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பச்சை பசேலென இருக்கிறது.

தொடர் மழையால் தாளவாடி வனப்பகுதிகளில் உள்ள வன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் வன விலங்குகளில் அங்கு உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் பெரும்பாலான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்தது. ஆனால் ஒரு சில யானைகள் மட்டுமே வனப்பகுதியை விட்டு வெளியேறினாலும் அவை அமைதியான முறையில் ரோட்டை கடந்து சென்று விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் தொல்லையின்றி சென்று வருகிறார்கள்.

இதே போல் அநதியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகளிலும் யானைகள்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியேறி வந்தன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகிறது.

இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அந்த பகுதிகளில் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவது குறைந்து உள்ளது.

Tags:    

Similar News