உள்ளூர் செய்திகள்
கோவையில் வீட்டு உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது
- வீடு காலி செய்யும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு
- சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை சுந்தராபுரம், காந்திநகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது53). இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் (37) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனை ஜானகிராமன் கண்டித்தார். மேலும் அவரிடம் வீட்டை காலி செய்யும் படி கூறினார்.
இந்த நிலையில் ஆனந்த் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தை பேசி தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த ஜானகிராமன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.