பெரியகுளத்தில் வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 4 பேர் கைது
- அருண்குமார் தனது செல்போன் மூலம் விஜயராஜனை சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
- தனது பணத்தை திரும்ப தருவதற்காக அழைக்கிறார் என நினைத்து விஜயராஜனும் சென்றார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் விஜயராஜன் (24). இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்தியநாதபுரம் வெற்றிலை மடத்தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (23) என்பவர் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை தராமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால் சூர்யபிரகாசின் மோட்டார் சைக்கிளை விஜயராஜன் பறித்துக் கொண்டார். தான் கொடுத்த பணத்தை கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிச் செல்லுமாறு கூறிவிட்டு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யபிரகாஷ், அவரது தம்பி அருண்குமார் (21) ஆகியோர் விஜயராஜனை கொலைசெய்ய திட்டமிட்டனர். அதன்படி சூர்யபிரகாஷ் தனது நண்பர்களான ரஞ்சித் (25), சசிபிரபு (23), பிரதீப் (24), முத்துராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய முடிவுசெய்தார்.
நேற்று வைத்தியநாதபுரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இவர்கள் அனைவரும் மது குடித்தனர். பின்னர் அருண்குமார் தனது செல்போன் மூலம் விஜயராஜனை சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். தனது பணத்தை திரும்ப தருவதற்காக அழைக்கிறார் என நினைத்து விஜயராஜனும் அங்கே சென்றார். அப்போது அருண்குமார் பணத்திற்காக மோட்டார் சைக்கிளை பறித்துக் கொள்வாயா? என கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயராஜனை வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராஜன் தப்பித்து ஓட முயன்றார். இருந்தபோதும் சூர்யபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுற்றி வளைத்து அவரை பிடித்துக் கொண்டனர். பின்னர் ஆட்டை அறுப்பதுபோல் அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஜயராஜன் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சூர்யபிரகாஷ், அருண்குமார், ரஞ்சித், சசிபிரபு ஆகிய 4 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.