உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே நர்சிங் மாணவியிடம் ஓடும் பஸ்சில் சில்மிஷம்- வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2022-11-08 15:45 IST   |   Update On 2022-11-08 15:45:00 IST
  • மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார்.
  • வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார்.

இரணியல்:

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்சில் வந்தார். ஊரிலிருந்து பஸ்சில் வடசேரிக்கு வந்த போது பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.

உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News