திருவள்ளூர் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
- வேப்பம்பட்டு அருகே உள்ள கந்தன்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.
- செவ்வாப்பேட்டை போலீசார் அவனிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே உள்ள கந்தன்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்.
இவர் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10.30 மணியளவில் புறநகர் ரெயில் மூலம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கி திருவள்ளூர் ஆவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முருகேசனை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றான்.
இதுகுறித்து முருகேசன் இரவு ரோந்துப் பணியில் இருந்த செவ்வாப்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது செவ்வாய்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்த போது அவன், திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை ராஜேஸ்வரி நகர் பகுதியைச்சேர்ந்த சத்யா (19) என்பதும் முருகேசனிடம வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி வந்ததும் தெரிந்ததது.
இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி குற்ற வழக்குகள் உள்ளன. அவனிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. செவ்வாப்பேட்டை போலீசார் அவனிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.