உள்ளூர் செய்திகள்

தாறுமாறாக ஓடிய போலீஸ் வாகனம் மோதி பெண் பலி

Published On 2024-02-02 10:56 GMT   |   Update On 2024-02-02 10:56 GMT
  • விபத்தில் மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  • தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள சீலை பிள்ளையார்புத்தூரில் ஒரு சமுதாயத்தினரை அவதூறாக சித்தரித்து மற்றொரு சமுதாயத்தினர் துண்டு பிரசுரங்கள் ஒட்டியதாக தெரிகிறது. இதை கண்டித்து ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்,

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் வாகனத்தை இருட்டான பகுதியில் இருந்து வெளிச்சமான பகுதிக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட்டி வந்தனர். அப்போது போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள அறிவழகன் என்பவரது வீட்டின் முன்பகுதியிலும், ராஜா என்பவரது சிமெண்ட் கடையிலும் மோதியது.

மேலும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இந்த வேளையில் அந்த வழியாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த முனையனூரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது மனைவி மருதாயியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அவர்கள் மீதும் போலீஸ் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தங்கராஜ் மற்றும் அப்பகுதியில் நின்ற முனையனூர் தினதயாளன் (48), சீலப்பிள்ளை யார்புதூர் இலுப்பைதோப்பு தெரு தீபன்(24) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.


இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் போலீஸ் வாகனத்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ் வாகனத்தை சாய்த்து வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் அப்பகுதியில் மிகுந்த பதட்டம் நிலவியது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த சம்பவ இடத்தை திருச்சி மண்டல டி ஐ.ஜி.மனோகரன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், முசிறி கோட்டாட்சியர் ராஜன், தொட்டியம் வட்டாட்சியர் கண்ணாமணி மற்றும் வருவாய்த்துறையினர், முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து தீனதயாளன் காட்டுப்புதுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் விசாரணை நடத்தியதில் விபத்தை ஏற்படுத்தியது திருச்சி ஆயுதப்படை காவலர் முசிறி அருகே உள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த லோகநாதன்(36) என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News