உள்ளூர் செய்திகள்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் இன்று அதிரடி சோதனை

Published On 2023-05-09 05:14 GMT   |   Update On 2023-05-09 05:14 GMT
  • திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.
  • உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிரடியாக சோதனை நடத்தி தடை செய்யப்பட்டுள்ள செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

திருச்சி:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் இருப்பவர்கள், தண்டனை காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப சட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருப்பவர்கள் என ஏராளமானோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் முகாமில் இருந்து கொண்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது.

சமீபத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், முகாமில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து அவ்வப்போது உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிரடியாக சோதனை நடத்தி தடை செய்யப்பட்டுள்ள செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி அளவில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் 6 உதவி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 200 போலீசார் முகாமுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தினமும் சிலரிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News