உள்ளூர் செய்திகள்

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை- பொதுமக்கள் அச்சம்

Published On 2024-03-17 07:17 GMT   |   Update On 2024-03-17 07:17 GMT
  • மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
  • யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.

வடவள்ளி:

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News