மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தேக்கம்: டெங்கு-மலேரியா பரவும் அச்சத்தில் நோயாளிகள்
- அண்மையில் பெய்த மழையால் வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
- வார்டுகளின் ஜன்னல் பகுதியில் செடி, கொடிகள் சூழ்ந்து புதராக கிடக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, பூஞ்சேரி, தேவநேரி, காரணை, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, வடகடம்பாடி, குழிப்பாந்தண்டலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பொது மருத்துவம், மகப்பேறு, விபத்து, காயம், காய்ச்சல், சர்க்கரை என அனைத்து நோய்க்கும் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சைக்கு வருகிறார்கள். உள் நோயாளியாக 10 பேர் தங்கியும் உள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வார்டுகளின் ஜன்னல் பகுதியில் செடி, கொடிகள் சூழ்ந்து புதராக கிடக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் வார்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற போது, மருத்துவமனை அருகில் உள்ள குளத்தை சீரமைத்தனர். அப்போது கழிவு நீர் வடிகால் அடைக்கப்பட்டதால் அந்த நீரும் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. சிகிச்சைக்கு மருத்துவமனை வரும் நோயாளிகள் கழிவுநீர் தேங்கி கிடப்பதை பார்த்து வேறு தொற்று நோய் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் பரவி கிடக்கும் புதர்களை அகற்றி, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க, வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.