உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: போலீஸ் நிலையத்தில் மகளை அடிக்க பாய்ந்த தாய்

Published On 2023-07-09 17:37 IST   |   Update On 2023-07-09 17:37:00 IST
  • பெண்ணின் வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
  • மகள் தன்னை தவிக்க விட்டு சென்றதால், மனவேதனையுடன் அழுதபடி அவரது தாயாரும் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது மகள் ஆறுமுக கனி (வயது 19). இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

நாங்குநேரி அருகே திருமலைபுரத்தை சேர்ந்த நயினார் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன்(வயது 21). இவரும் பேட்டையில் ஆறுமுக கனி படித்த அதே கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் பழக்கமாகி காதல் ஏற்பட்டது. இது பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆறுமுக கனியை மேற்கொண்டு படிக்க மறுத்து வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்த ஆறுமுக கனி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் சீவலப்பேரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் தான் காதலித்த பால சுப்பிரமணியனை திருமணம் செய்து கொண்டு பாளை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதுகுறித்து பெண்ணின் வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு ஆவேசத்துடன் வந்த ஆறுமுக கனியின் தாயார் நெஞ்சில் அடித்து அழுது புலம்பினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், உனது தந்தை இறந்து ஒரு வருடத்தில் இப்படி செய்து விட்டாயே என்று கூறி அடிக்க பாய்ந்தார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் அவரை பிடித்து இழுத்து சென்றனர்.

தொடர்ந்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் கேட்டபோது, நான் எனது கணவருடன் செல்கிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.

மகள் தன்னை தவிக்க விட்டு சென்றதால், மனவேதனையுடன் அழுதபடி அவரது தாயாரும் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

Tags:    

Similar News