உள்ளூர் செய்திகள்

காட்டெருமை முட்டி விவசாயி பலி

Published On 2024-03-01 07:57 GMT   |   Update On 2024-03-01 07:57 GMT
  • பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் வீராணம் சுக்கம்பட்டியை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 42). விவசாயி. இவருக்கு ஏற்காடு அடிவாரத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதனால் மாதையன் தினமும் காலையில் தோட்டத்திற்கு செல்வது வழக்கம்.

வழக்கம்போல் இன்று காலை 7 மணிக்கு அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு குடத்தை எடுத்துக்கொண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் உள்ள கிணறு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை மாதையனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் தொடை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காட்டெருமையை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த மாதையனை மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அதன் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்து மாதையன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீராணம் போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், சேர்வராயன் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காட்டெருமை முட்டி பலியான மாதையன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பலியான மாதையனுக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும் புவனேஸ்வரன் (13), நவனேஸ்வரன் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

Similar News