ஈரோட்டில் நள்ளிரவில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள சந்தன மரம் வெட்டி கடத்தல்
- ஈரோடு அடுத்த மேட்டுக்கடை மர புளியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர்.
- 35 ஆண்டுகள் பழமையான ஒரு சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த மேட்டுக்கடை மர புளியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (55). இவருக்கு அதே பகுதியில் வீடு அதையொட்டி தோட்டம், வயல் வெளிகள் உள்ளன. இவர் தனது வீட்டின் அருகிலேயே தோட்டத்தில் தானாக முளைத்த சில சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.
பாதுகாப்புக்காக வீடு, தோட்டம் சுற்றி சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி வைத்திருந்தார். தோட்டத்தை சுற்றி மின்வேலிகள் அமைத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் இவரது தோட்டத்திற்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.
அவர்கள் 35 ஆண்டுகள் பழமையான ஒரு சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தோட்டத்துக்குள் மர்ம நபர்கள் புகுவது, சந்தன மரத்தை வெட்டி கடத்தி செல்வது அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா கட்சியில் பதிவாகி இருந்தது.
இன்று காலை ராமசாமி தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இவரது தோட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடத்த க்கது.