தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழியிடம் புகார் கொடுக்க வந்த வெற்றிவேல்.
திருடுபோன மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும் போலீஸ்காரர்: மீட்டுத்தரக்கோரி டி.ஐ.ஜி.யிடம் தொழிலாளி புகார்
- 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி வண்டி திருட்டு போனது.
- செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
தஞ்சாவூர் :
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழியிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி ஓட்டி வந்தேன். 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி இரவு விருத்தாச்சலம் காந்தி நகர் அருகே உள்ள சாவடி குப்பத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டின் எதிரில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தேன்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது எனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. எனது மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன்.
இந்த நிலையில் கடந்த மாதம் எனது செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதால் ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது.
ஏற்கனவே மோட்டார் சைக்கிள் காணாமல் போனதால் மனவேதனையில் இருந்த நான் இந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனையடுத்து நான் எனது நண்பர்களுடன் நாகை மாவட்டத்திற்கு சென்று சில நாட்கள் எனது மோட்டார் சைக்கிளை தேடிப்பார்த்தேன்.
அப்போது நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் எனது மோட்டார் சைக்கிளை வைத்திருப்பதும், அவர் சிறுவன் ஒருவனுடன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது.
அவர் போலீஸ்காரர் என்பதால் அவரிடம் எனது மோட்டார் சைக்கிள் குறித்து பேச பயமாக உள்ளது. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து திருடு போன எனது மோட்டார் சைக்கிளை அந்த போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.