உள்ளூர் செய்திகள்
தாக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற காட்சி.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை கடத்தி ரூ.1 ½ கோடி பணம் பறித்த முன்னாள் உதவியாளர் உள்பட 6 பேருக்கு வலை வீச்சு

Published On 2022-08-26 16:36 IST   |   Update On 2022-08-26 16:36:00 IST
  • ஈஸ்வரன் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
  • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் ஈஸ்வரனை கடத்திய கும்பல் குறித்து அடையாளம் தெரியவந்தது.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு வரை பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் அருகே உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கிருந்து அவர் மீண்டும் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு பகுதியில் சென்றார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. ஈஸ்வரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை திடீரென வழிமறித்தபடி அந்த கார் வந்து நின்றது.

அந்த காரில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் வேகமாக இறங்கி ஈஸ்வரன் கண்ணில் ஒரு துணியால் கட்டி அவரை காரில் கடத்தி சென்றது. இதையடுத்து மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற அந்த கும்பல் ஈஸ்வரனை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி வேண்டும் என கேட்டு அவரை அந்த கும்பல் உருட்டு கட்டையால் தாக்கியது.

இதையடுத்து அவர் தனது வீட்டில் ரூ.1½ கோடி பணம் உள்ளது அதைப்பெற்று தன்னை விடுக்குமாறு கேட்டுள்ளார். நேற்று அதிகாலை அந்த கும்பல் ஈஸ்வரனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது. வீட்டில் இருந்த ரூ.1½ கோடியை ஈஸ்வரன் அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து ஈஸ்வரன் சார்பில் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஈஸ்வரன் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஈஸ்வரனை கடத்திய கும்பல் குறித்து அடையாளம் தெரியவந்தது.

அதன்படி 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மிலிட்டரி சரவணன் என்பவர் இருந்துள்ளார். சரவணன் தான் ஈஸ்வரனை கடத்தியதில் மூளையாக செயல்பட்டுள்ளார்.

சரவணன் திட்டப்படி சம்பவத்தன்று அவருடன் 5 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து ஈஸ்வரனை கடத்தி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது சரவணன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகிவிட்டது. இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் சரவணன் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News