காதல் கணவருடன் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரைசல் * * * 50 அடி பள்ளத்தில் இருந்து போலீசார் ரைசலை மீட்ட காட்சி.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை? காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலனை பார்ப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ரைசல் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார்.
- ரைசல், எர்ணாகுளத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டார்.
ஓமலூர்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ். (வயது 48). இவர் மருத்துவத்துறையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
இவர், வாட்ஸ் அப் , பேஸ்புக் மூலம் பிலிப்பைன்ஸ் மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் ( 35) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தொடர்ந்து இருவருடைய காதலும் தீவிரமானது.
இதனை தொடர்ந்து அந்த பெண், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலனை பார்ப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார். இதையடுத்து ரைசல் தனது காதலனை கரம் பிடித்தார். ஹாரிசும், ரைசலும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பெங்களூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது ரைசல், எர்ணாகுளத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டார். மேலும் அவரது உறவினர்களிடம் ஆசி பெற விரும்பினார். இது பற்றி கணவர் ஹாரிஸிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்தனர்.
ரெயில், ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ரெயில் நிலையத்தை கடந்தவுடன் ரைசல், திடீரென ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். அப்போது ரைசல் விழுந்த இடம் 50 அடி அழம் கொண்ட பள்ளமாகும். இதனால் அவர், பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது கணவர் ஹாரிஸ், அடுத்த வந்த ரெயில் நிறுத்தமான ஓமலூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரைசல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து விரைந்து சென்று பார்வையிட்டனர். ரைசல், ரெயிலில் இருந்து விழுந்து இறந்ததால் இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் மற்றும் போலீசார், ரைசல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் ஹாரிஸ், தனது காதலி ரைசலை, எர்ணாகுளத்துக்கு அழைத்து பெற்றோர் முன்னிலையில் வைத்து திருமணம் செய்து கொள்ளவில்லை.
கேரள மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்யாமல் ரகசியமாக பெங்களூவில் பதிவு செய்துள்ளதும், மேலும் ஹாரிஸ், எர்ணாகுளத்தில் சொந்த வீடு இருந்தபோதும், அங்கு குடும்பம் நடத்தாமல் மறைமுகமாக பெங்களூருவில் குடும்பம் நடத்தியது ஏன்? என பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு எழுந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு ரைசல் தனது கணவரிடம் எர்ணாகுளத்தில் உள்ள உங்களது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் உடனடியாக அழைத்து செல்லவில்லை. தொடர்ந்து காலம் கடத்தி வந்தார். இருப்பினும் ரைசல் விடவில்லை. தொடர்ந்து கட்டாயபடுத்தியதாலும் வேறு வழியில்லாததாலும் தனது வீட்டுக்கு ரைசலை அழைத்து செல்ல ஹாரிஸ் முடிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் ரைசல், ஊருக்கு வந்தால் தன்னை பற்றி ஏதேனும் ரகசியம் தெரிந்து விடுமோ என நினைத்து ரெயிலில் இருந்து ரைசலை கீழே தள்ளி விட்டு ஹாரிஸ் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹாரிஸிடம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது கணவர் வீட்டுக்கு ஆசையோடு சென்றபோது மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.