உள்ளூர் செய்திகள்

பெரியபாளையத்தில் டிரெய்லர் லாரி விபத்து: போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-08-15 16:48 IST   |   Update On 2023-08-15 16:48:00 IST
  • டிரெய்லர் லாரி ஒன்று இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.
  • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கி எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிரெய்லர் லாரி ஒன்று இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.

மேலும்,பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்று விட்டது. இதனால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.

இதே போன்று பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையிலும், பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. இதனால் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுதந்திர தின விழாவை கொண்டாட அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த ஒன்றிய குழு உறுப்பினர்களும் சாலை ஓரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று மதியம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெரியபாளையம் கோவில் அருகே இருந்த பழுதான லாரியை பொதுமக்களும்,போலீசாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.மேலும், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளான டிரெய்லர் லாரியையும் பொதுமக்களும்-போலீசாரும் கிரேன்மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர்,வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இன்று அரசு விடுமுறை மற்றும் சுதந்திர தின விழா,கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் முக்கிய நாள் என்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

Tags:    

Similar News