உள்ளூர் செய்திகள்

பஸ்சுக்குள் மழைநீரில் நனைந்தபடி பயணம் செய்த பயணிகள்- வீடியோ வைரலாக பரவுகிறது

Published On 2022-06-20 15:00 IST   |   Update On 2022-06-20 15:00:00 IST
  • குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சுக்குள் குடை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர்.
  • சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் பழுதாகியும் சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்தது. திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து புல்லரம்பாக்கம், பூண்டி, நம்பாக்கம் வழியாக பென்னலூர்பேட்டை சென்ற அரசு பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

கனமழை காரணமாக பஸ்சின் மேற்கூரையில் ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சுக்குள் குடை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர். பலர் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்தனர்.

இதனை சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சி தற்போது வைரலாகி பரவி வருகிறது. பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக மாற்று பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News