உள்ளூர் செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் கர்நாடக அரசு சொகுசு பஸ் கண்ணாடியை உடைத்த யானை

Published On 2022-07-30 10:39 IST   |   Update On 2022-07-30 10:39:00 IST
  • வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
  • யானைகள் தும்பிக்கையால் அந்த சொகுசு பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 22 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையான இந்த வனப்பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள்கள், வேன், பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் உலாவி வருகிறது.

இந்த வனப்பகுதிகளில் இருந்து வரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும், துரத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை திம்பம் அருகே உள்ள ஆசனூர் அடுத்த ஆரேபாளையம் வழியாக கரும்புகளை ஏற்றி கொண்டு லாரிகள் வந்தது. அந்த வாசனையால் யானைகள் குட்டிகளுடன் ரோட்டுக்கு வந்தது. ஆனால் கரும்பு லாரிகள் அங்கு இல்லாததால் யானைகள் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து யானைகள் வனப்பகுதியில் சென்றது.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஹாரன் அடித்தார். அந்த சத்தத்தை கேட்டு யானைகள் குட்டிகளுடன் மீண்டும் ரோட்டுக்கு வந்தது. தொடர்ந்து அந்த யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது. இதையடுத்து வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தப்பட்டன. ஆனால் யானைகள் வாகனங்களை துரத்தியபடி அங்கேயே உலாவி கொண்டே இருந்தது.

அப்போது அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா அரசு சொகுசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்ட வந்தது. யானையை கண்டு அந்த பஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் ஆக்ரோஷம் அடைந்த யானைகள் திடீரென அந்த சொகுசு பஸ்சை தாக்க தொடங்கியது. தொடர்ந்து குட்டிகளுடன் அந்த யானைகள் தும்பிக்கையால் அந்த சொகுசு பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தது.

இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அலறினார்கள். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய யானைகள் நீண்ட நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News