உள்ளூர் செய்திகள்

வத்தலக்குண்டு அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2024-03-23 07:04 GMT   |   Update On 2024-03-23 07:04 GMT
  • பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
  • முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

நிலக்கோட்டை:

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு அருகே பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரைக்கு வந்த வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிரைவர் நடராஜன் (வயது 34), மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலநாதன் (49) ஆகியோரிடம் விசாரித்த போது மதுரையில் உள்ள 3 நகை கடைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்போது நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

பறக்கும்படை சோதனையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News