மேல்மருவத்தூர் அருகே பணிச்சுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலாளர் மாயம்
- பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலர் மாயமான சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆராமுதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அடுத்த ஊனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊனமலை ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக ஆராமுதன், மொறப்பாக்கம் ஊராட்சியின் செயலராகவும் கூடுதல் பொறுப்பாக பணி செய்து வந்தார். இதனால் அவர் கூடுதல் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆராமுதன், வேலைக்கு செல்வதாக மனைவி பிரேமாவிடம் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பிரேமா மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ஆராமுதன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ஊனமலை மற்றும் மொறப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் பொறுப்பாக ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருவதால், பணி சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே நிம்மதியை தேடி செல்கிறேன் என்று எழுதி வைத்து உள்ளார். பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலர் மாயமான சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆராமுதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.