நெல்லை அருகே பட்டப்பகலில் போலீஸ்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
- கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்காரரின் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தேவர்குளம் வடக்கு பூலாங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, (வயது 52). விவசாயி.
இவர் காவல்துறையில் பணியாற்றும் தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். திருமண செலவுகளுக்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று காலை அவர் தனது குடும்பத்தினருடன், பெண் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் இருந்த சுவரில் 2 செங்கலை பெயர்த்தெடுத்து உள்ளே சென்று ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாலையில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிய முத்துப்பாண்டி வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதையும், பின்பக்க சுவர் உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சிடைந்தார்.
மேலும் மகனின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் கொள்ளை போனதை அறிந்து அவர் மனமுடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.
மேலும், கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தேவர்குளம் போலீசார் கூறுகையில், "மர்ம நபர்கள் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து பின்பக்க சுவரில் செங்கலை உடைத்துள்ளனர். அதன் வழியாக வீட்டிற்குள் நுழைந்து ரூ.1 லட்சம் திருடி தப்பியுள்ளனர். கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம்."என்றனர்.
போலீஸ்காரரின் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.