உள்ளூர் செய்திகள்

அனிதா பெயர் சூட்டப்படுவதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் பற்றி தெரிந்துகொள்வார்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-03-14 09:54 GMT   |   Update On 2023-03-14 09:54 GMT
  • புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
  • இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

அரியலூர்:

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிவந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே.

நான் பிரதமர் மோடியை சந்தித்தபோது கூட, நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்து வந்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

Tags:    

Similar News