உள்ளூர் செய்திகள்

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை- அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2023-06-30 08:08 GMT   |   Update On 2023-06-30 08:08 GMT
  • அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
  • திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை.

சென்னை:

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. செந்தில் பாலாஜியை தனிமைப்படுத்தி குற்றச்சாட்டுவதற்கான அவசியம் என்ன? குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநர் அதிகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு உள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்களா?. இல்லாத பூனையை இருட்டு வீட்டில் தேடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை.

அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் சொல்லும் சட்டப்பிரிவுகள் சரியானதா?. உச்சநீதிமன்ற கருத்துக்களை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி நீக்கம் என ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் மேற்கொள் காட்டிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் செந்தில் பாலாஜி வழக்கிற்கும் தொடர்பு இல்லை என தி.மு.க. எம்.எபி. வில்சன் கூறினார்.

Tags:    

Similar News